பொருநராற்றுப்படை (Porunaaratruppadai)
பொருநர் என்போர் வேறொருவரைப்போல் வேடம் அணிந்து நடிக்கும் கலைஞர்கள் ஆவர். இவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர்[1] என மூவகையினர். இப்பாட்டில் வரும் பொருநன், “வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ணார் கண்ணி கரிகால் வளவன்” என்று கரிகால் வளவன் போரில் வெற்றி பெற்றதைப் பற்றிப் பாடுவதால், அவன் போர்க்களம் பாடும் பொருநன் என்று தெரிகிறது. இப் பாட்டில், கரிகால் வளவனிடம் பரிசு பெற்ற பொருநன் பரிசளிப்பவர்களைத் தேடி அலையும் பொருநனைக் கரிகால் வளவனிடம் ஆற்றுப்படுத்துவதால் இப் பாட்டு பொருநராற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது.
[1] . போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை அழித்து வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுதல் பரணி பாடுதல் என்று அழைக்கப்படுகிறது.