Sirupaanatrupadai (சிறுபாணாற்றுப்படை)
சீறியாழ் எனப்பட்ட சிறிய யாழினை இசைத்துப் பாடியோர் சிறுபாணர் என்றழைக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு சிறுபாணர், ஓய்மா நாட்டை ஆண்ட நல்லியக் கோடன் என்ற வள்ளலிடம் பரிசுகள் பெற்றுத் திரும்பியதையும் அவ்வள்ளலின் நல்லியல்புகளையும் நத்தத்தனார் எனும் புலவர் இந்நூலில் எடுத்துரைக்கின்றார். சிறுபாணன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
ஆற்றுப்படை என்னும இலக்கிய வகை தமிழுக்கே உரியது. இது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். சங்க காலத்தில் தொகுக்கப்பட்ட பத்துப்பாட்டு நூல்களுள் இது மூன்றாவதாகும். பொது யுகம் 2-ஆம் நூற்றாண்டில் இந்நூல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நூலுக்குப் பதினான்காம் நூற்றாண்டில் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.