பெரும்பாணாற்றுப்படை (Perumpaanatruppadai)
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தொண்டை நாட்டை ஆண்டுவந்த இளந்திரையன் என்ற மன்னனிடம் பரிசுபெற்ற பாணன், பரிசுக்காகப் புரவலர்களைத் தேடி அலையும் பாணன் ஒருவனை, இளந்திரையனிடம் சென்றால் பரிசு கிடைக்கும் என்று கூறி, அவன் இருக்கும் கச்சி (காஞ்சிபுரம்) என்ற ஊருக்குச் செல்லும் வழியை விளக்கமாக எடுத்துரைக்கிறான். பெரும்பாணாற்றுப்படையைப் படிக்கும் பொழுது, அதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்த தமிழகத்தின் பாலை, குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலப்பகுதிகள் வழியாக, நீர்ப்பாயல் (மகாபலிபுரம்) என்ற துறைமுகப் பட்டினத்துக்கும், அங்கிருந்து கச்சி நகரத்துக்கும் (காஞ்சிபுரத்துக்கும்) நம்மை அழைத்துச் செல்வது போல் தோன்றுகிறது. பெரும்பாணாற்றுப்படை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட நூல். அதிலுள்ள பல சொற்கள் இன்று வழக்கில் இல்லாததால் அதைப் படித்துப் புரிந்துகொள்வது சற்றுக் கடினம். அதைப் பலரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, பெரும்பாணாற்றுப்படையில் உள்ள அருஞ்சொற்களுக்குப் பொருள், பதவுரை, கருத்துரை மற்றும் சில விளக்கங்களும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.