Sale
நெடுநல்வாடை (மூலமும் எளிய உரையும்) : (Nedunalvaadai)
நெடுநல்வாடைக்கு 14 ஆம் நூற்றாண்டில் நச்சினார்க்கினியரும், சென்ற நூற்றாண்டில் இதனை உ.வே.சாமிநாதர் அவர்கள் அச்சுக்குக் கொணர்ந்தபின் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரும் உரை எழுதினர். இரு உரைகளும் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியா நிலையில் கடினமாக உள்ளன. இக்குறை போக்க அண்மையில் சில தமிழறிஞர்கள் எளிய உரை எழுதியுள்ளனர். அவற்றில் முனைவர் இர. பிரபாகரனின் இந்த உரை சில தனிச்சிறப்புகளைப் பெற்றுச் செம்மாந்து நிற்கிறது.
மேலோட்டமாகப் படித்து நூல் செய்தியை அறிய விரும்புவோருக்கும், ஆழ்ந்து படித்து நுணுக்கமாகப் பொருளறிய முனைவோருக்கும் ஏற்ற வகையில் அவர் உரை அமைந்துள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கு அறிமுகமில்லாதவர்களை மனதில் கொண்டு தமிழின் சிறப்பையும், பின் சங்க இலக்கியம் பற்றியும் எளிய தெளிவான அறிமுகம் வழங்கிவிட்டுப் பின்னர் நெடுநல்வாடை பற்றிய சிறப்புகளைக் கூறிய பின்னரே ஆசிரியர் உரை எழுத முற்படுகிறார். இது படிப்போருக்குப் பாடல்களுக்குள் செல்லும் உந்துதலைத் தூண்டுகிறது. நெடுநல்வாடை பாடல்கள் முழுவதையும் வெளியிட்டபின் நிகழ்வுகளைத் தனித்தலைப்பிட்டுப் பிரித்துப் பொருள் விளக்கமளித்து, பின் பதவுரையும் தொடர்ந்து கருத்துரையும் வழங்கியுள்ளார். இறுதியாக நெடுநல்வாடை முழுவதற்குமான பொருளை உரைநடையாக்கி வழங்கியுள்ளார். எனவே எந்த முறையிலும் இந்த இலக்கியத்தை அணுகி அறிய விரும்புவோருக்கும் துணை செய்யும் வண்ணம் இவரின் உரை அமைந்துள்ளது.